திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அத்தனாவூர் கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அருள் சில தினங்களுக்கு முன்பு காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அவரை காரில் கடத்தி சென்றனர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியும் உள்ளனர்.
இது குறித்து அருளின் மனைவி அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், அருளை ஆந்திர மாநிலம் குழுவாடாபள்ளி அருகே பத்திரமாக மீட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியும் ஆட்டோ ஓட்டுனருமான சம்பத்தை கைது செய்த காவல்துறையினர் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 64 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும், இயந்திரங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதேப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.