உணவு பொருட்களை அடைக்க பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில் அளிக்கப்பட்ட விலக்கை நீக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி. ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஓராண்டில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த, 52 தொழிற்சாலைகளை மூடவும், மின் இணைப்புகளை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பால், தயிர், எண்ணெய் போன்ற உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீக்குவது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை அளித்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆவணப்படங்களை திரைப்படங்களில் சேர்க்கவும், கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதி தள்ளிவைத்தனர்.
Discussion about this post