தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஐந்தாயிரத்து 609 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூவாயிரத்து 295 ஆண்களுக்கும், இரண்டாயிரத்து 314 பெண்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 21 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 985 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மாவட்ட அளவில் அதிகரித்து வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டையில் 382 பேருக்கும், விருதுநகரில் 348 பேருக்கும் திருவள்ளூரில் 332 பேருக்கும், செங்கல்பட்டுவில் 331 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 322 பேருக்கும் புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் ஐந்தாயிரத்து 800 பேர் குணமடைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 76 புள்ளி 84 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 56 ஆயிரத்து 698 பேர் உள்ள நிலையில், மேலும் 109 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை நான்காயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது.