வேதியியல் பாடப்பிரிவில் உள்ள, 118 தனிமங்களின் பெயர்களை, இடைநிற்றல் இன்றி மனப்பாடமாக கூறி, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார், நான்கு வயது சிறுமி ஒருவர்.
இளம் தளிர்களின் சாதனை என்றாலே, உலக நாடுகளின் பெயர்கள், அவற்றின் தலைநகரங்கள் அல்லது நாட்டில் உள்ள மாநிலங்கள், தமிழரின் பாரம்பரிய நூலான திருக்குறளை ஒப்புவித்தல் போன்றவை இடம் பெறுவது வழக்கம்.
அவற்றிற்கு, விதிவிலக்காக, அறிவியல் துறை வல்லுனர்களே, மனப்பாடம் செய்ய தடுமாறும், வேதியியல் பிரிவின், 118 தனிமங்களை மனப்பாடம் செய்து, இடைநிற்றல் இன்றி ஒப்புவித்து அசத்துகிறார், தாம்பரம் அருகே உள்ள, முடிச்சூரைச் சேர்ந்த, 4 வயது சிறுமி உதிதா.
முடிச்சூரை சேர்ந்த மாரிச்செல்வன், ஆனந்தி தம்பதியினர் மகள் உதிதா, தனியார் பள்ளியில், யூ.கே.ஜி. படித்து வருகிறார். இவரின் தாயார் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக வேதியல் பாடப்பிரிவில் உள்ள தனிமங்களின் பெயர்களை மனப்பாடம் செய்து வந்தார்.
குறும்பு தனமான உதிதா , தாயார் படிப்பதை தீவிரமாக கவனித்து வந்தார், பிறகு தானும் தனிமங்களின் பெயர்களை கூற வேண்டும் என நினைத்து தாயார் உடன் இணைந்து தனிமங்களின் பெயர்களை மெல்ல மெல்ல கற்று வந்தார். ஒரு கட்டத்தில், 80 தனிமங்களின் பெயர்களை, மனப்பாடமாக இடைநிற்றல் இன்றி கூறினார்.
தொடர்ந்து, மீதமுள்ள, 38 தனிமங்களின் பெயர்கள் கற்றுக்கொண்டார். பின்னர் நாட்டின் மாநிலங்கள், தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும் உதிதா எளிதில் கற்றுக்கொண்டார்.தனிமங்கள், மாநிலங்களின் பெயர்களை, மனப்பாடமாக, உதிதா கூற ஆரம்பித்தவுடன், இவரின் திறமையை உலகிற்கு கொண்டு செல்ல நினைத்தனர் உதிதாவின் பெற்றோர். அதனை பறைசாற்றும் விதமாக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸை தொடர்பு கொண்டு உதிதாவின் சாதனையை இடம்பெற செய்தனர்.சிறு வயதிலேயே 1நிமிடம் 40 விநாடிகளில் தனிமங்களின் பெயர்களை மனப்பாடமாக கூறி, தனது அசாத்திய திறமையால் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் உதிதா.
இது குறித்து உதிதாவின் பெற்றோர் கூறுகையில், தனிமங்களை தொடர்ந்து, மனித உடற் கூறியல் குறித்து, உதிதாவிற்கு கற்றுக் கொடுத்து வருகிறோம். அதை, மனப்பாடமாக சொல்லிவிட்டால், ‘கின்னஸ்’ சாதனை புத்தக முயற்சிக்கு விண்ணப்பிக்கவுள்ளோம் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர்.இதே போன்று, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அதனை வெளிக்கொணர ஊக்குவித்தால், உதிதா போன்று பல்வேறு சாதனையாளர்கள், இந்த சமூகத்திற்கு கிடைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.