ஜிஎஸ்டியில் உள்ள 12 மற்றும் 18 சதவீத வரி வரம்புகளுக்கு பதிலாக, நிலையான வரி விகிதம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறையில், செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அவரது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், சில பொருட்களை தவிர அனைத்து பொருட்களும், 18 சதவிகிதம் அல்லது அதற்கு கீழ் உள்ள வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வரி வருவாய் கணிசமாக உயரும் போது, 12 மற்றும் 18 சதவிகிதகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, அவைகளுக்கு பதிலாக நிலையான வரி வரம்பு ஒன்று உருவாக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இந்த வரி வரம்பானது 12 மற்றும் 18 சதவிகிதங்களுக்கு இடையில் நிர்ணயிக்கப்படும் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதன்மூலம் 695 பொருட்கள் ஒற்றை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும். 28 சதவிகித வரம்புக்குள் உள்ள பொருட்களுக்கும் படிப்படியாக வரி குறைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.