ஜம்மு காஷ்மீர் தொடர்பான 370ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதே சமயம், காஷ்மீருக்குச் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசியல் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் செல்ல முடியும் என்பதை மனுதாரர்களின் வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்வதற்குத் தடை விதித்துள்ளது அரசியல் சட்டம் வழங்கிய உரிமையை மறுக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர்களின் ஒருவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரிக்கு அவரது கட்சியைச் சேர்ந்த யூசுப் தாரிகாமி என்பவரைச் சந்திக்கச் செல்ல நீதிபதிகள் அனுமதி அளித்தனர். நண்பரைச் சந்திக்கத்தான் செல்ல வேண்டுமேயொழிய அரசியல் நோக்கங்களுக்காகச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்த மனுக்கள் அனைத்தையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியதுடன் அக்டோபர் முதல் வாரத்தில் விசாரணை தொடங்கும் எனத் தெரிவித்தனர். இது தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.