உயிரிழந்த பெண்ணின் கண்ணியத்தை காத்த தீயணைப்பு வீரர்

பொள்ளாச்சியில் உயிரை பணையம் வைத்து கால்வாயில் இருந்த உடலை மீட்ட தீயணைப்பு படை வீரருக்கு வீரதீர செயலுக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி இந்த செய்தி தொகுப்பு…

பொள்ளாச்சி பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அவசர காலங்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டடுள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார் உமாபதி தண்டபாணி. பொள்ளாச்சி அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவரான இவர், தீயணைப்பு நிலையத்தில் மீட்புக்குழு வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் அமைந்துள்ள கெடிமேடு வழியாகச் செல்லும் பிஏபி வாய்க்காலில் ஒரு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கோவையைச் சேர்ந்த 8 நபர்கள் காரில் இருந்தபடியே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அந்த வாய்க்காலில் சுமார் 1,000 கனஅடி தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும், இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் மீட்பு பணிக்கு வந்த தீயணைப்பு வீரர் உமாபதி தண்டபாணி, தன் உயிரை துச்சமாக எண்ணி கால்வாயில் தனி ஆளாக இறங்கினார். மேலும் காரில் இருந்த உயிரற்ற உடல்கள் அனைத்தையும் தனது உயிரை பணையம் வைத்து கிரேன் உதவியுடன் கரை சேர்த்தார்.

இந்த துணிச்சலை பாராட்டி வீரர் உமாபதிக்கு விருது வழங்க, தமிழக அரசு மூலம் மத்திய அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி ஜனாதிபதியின் 2019ஆம் ஆண்டின் சுதந்திர தின வீர தீர பதக்கம் வீரர் உமாபதி தண்டபாணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வீரதீர செயலுக்கான மத்திய அரசின் விருது, பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கு அறிவிக்கப்பட்டது, அப்பகுதி மக்களை பெருமை அடைய செய்திருக்கிறது.

இது குறித்து நமது நியுஸ்ஜெ செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்த உமாபதி தண்டாபாணி, இந்த விருது தனக்கு பெருமை சேர்த்தாலும், விபத்தில் உயிரிழந்த 8 பேரில் ஒருவரையாவது உயிருடன் மீட்க வாய்ப்பில்லாமல் போனது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், விபத்தின் போது நீருக்கடியில் காரில் சிக்கி உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலத்தை மீட்கும் போது நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

இப்படி ஆபத்தான மீட்புப் பணியில் இருந்த போதும் உயிரற்ற ஒரு பெண்ணின் உடலுக்கு அவர் செய்த மரியாதை அனைவரின் பாராட்டை பெற்றது. மேலும் மத்திய அரசால் வழங்கப்பட்ட அந்த விருதுக்கும் ஒரு நியாயம் சேர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Exit mobile version