டெல்லியில் மின்கலத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து

டெல்லியில் மின்கலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி பீரா கரி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த மின்கலன் தயாரிக்கும் தொழிற்சாலையின்  கிடங்கில் நேற்றுப் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து பல இடங்களிலும் இருந்து 35 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த  தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தீவிபத்தில் மீட்புப் படை வீரர்கள் 15 பேர் காயமடைந்தனர். தீயில் எரிந்து சேதமடைந்த ஒரு தளம் இடிந்து விழுந்ததில் 29 வயதான தீயணைப்பு வீரர் அமித் பல்யான் சிக்கிக் கொண்டார். 6 மணி நேரம் கழித்துத் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே அமித் பல்யானின் உடல் மீட்கப்பட்டது. அமித் பல்யானுக்குத் தாய் தந்தை, ஒரு தம்பி, 2 தங்கைகள், மனைவி ஆகியோர் உள்ளனர். தீயணைப்பு வீரர் அமித் பல்யானை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமித் பல்யானின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Exit mobile version