திருவண்ணாமலையில் கொய்யா சாகுபடி செய்து அதிக லாபத்திற்கு விற்பனை செய்துவருவதாக விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமர்நாதபுதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரங்கன் என்பவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தோட்டக்கலைத்துறை மூலம் இலவசமாக 200க்கும் மேற்பட்ட கொய்யா கன்றுகள் பெற்று சுமார் 50 சென்ட் நிலப்பரப்பில் நடவு செய்து பராமரித்து வந்தார். தற்போது கொய்யா நல்ல மகசூல் கொடுத்துள்ளது. இதனால் செங்கம் பகுதியை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து கிலோ 40 முதல் 60 வரை பெற்றுச் செல்வதாக விவசாயி தெரிவிக்கிறார். மேலும் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் கொய்யா தோட்டம் நல்ல வளர்ச்சி அடைந்து அதிகப்படியான மகசூல் கிடைத்துள்ளதாகவும் அதேபோல் நல்ல லாபம் ஈட்டி தருவதாகவும் விவசாயி ரங்கன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.