ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மின்வாரியத்தின் அலட்சியத்தால், வயலில் தொங்கி கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. அங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நெற்பயிர்கள், விளைச்சலை எட்டும் பருவத்தில் உள்ளன.
அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்தையா, தன்னுடைய வயலில் விதைப்பு செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக வயலில் அறுந்துகிடந்த மின்கம்பியை விவசாயி மிதித்ததால் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
உயர் அழுத்த மின்கம்பி, அறுந்து கீழே விழுந்து கிடப்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே விவசாயி உயிரிழந்தாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மேலச்சிறுபோது-முதுகுளத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த வந்த கடலாடி வட்டாட்சியர் சேகர் மற்றும் முதுகுளத்தூர் டிஎஸ்பி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிடப் போவதில்லை என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Discussion about this post