CBF -2019 எந்தெந்த படைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன? மக்கள் கருத்து என்ன?

42வது சென்னை புததகக் கண்காட்சியின், நான்காவது நாளில், எந்தெந்த படைப்புகள் ஆதிக்கம் செலுத்தின என்பதைப் பற்றிய கட்டுரை.

சுயமரியாதை, சமத்துவம், பொதுவுடமை என உலகம் பின்பற்ற வேண்டிய முப்பெருந்தத்துவங்களை உலகுக்குத் தந்த பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரின் படைப்புகளே நான்காவது நாளில் ஆதிக்கம் செலுத்தின.

கடந்த ஆண்டு புத்தகக்கண்காட்சியில் அமோக வரவேற்பைப் பெற்ற அம்பேத்கர் இன்றும் என்றும் தொகுப்பைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சூழ, பெரியாரின் தொகுப்புகளோடு நம்மை வரவேற்றது, இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் மார்க்சியம் இன்றும் என்றும் தொகுப்பு.
நுண்மையான வாசகர்கள் நூல்களோடு உரையாடிக்கொண்டிருக்க, ஆர்வமோடு புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த இளைஞர்களை அணுகினோம். தான் தேடித்தேடி அலைந்து புத்தகம் வாங்கிய கதையை ஒருவர் சொன்னார்.

தேடித்தேடி அலைந்து குறைந்த விலை புத்தகங்கள் வாங்கி வருகிறேன். காரணம் இந்த பதிப்பகத்தின் இந்த தொகுப்பை வாங்க முடியாமல் போய்விடுமோ என்றுதான்.

 

அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் என புரட்சி உலகின் உச்சத்தில் நிற்கும் இந்த மூவரையும் தவறவிட எண்ணாதவர்கள், தவற விடக்கூடாத தொகுப்புகள் இவை. இவற்றைத் தேடிவந்த இளைஞர்கள், தற்போது விட்டுவிட்டால், அடுத்த ஆண்டு கிடைக்காதோ என்று ஏங்குகிற அளவுக்கு ஈர்த்திருக்கின்றன என்பது இன்னும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

நான் பொருளியல் முடித்திருக்கிறேன். கடந்த இரு ஆண்டுகளாக அம்பேத்கரையும் பெரியாரையும் வாசித்து வருகிறேன். அடுத்து சட்டம் படிக்க ஆசை இருப்பதால் அம்பேத்கர் மீதான தேடல் அதிகமாயிருக்கிறது. ஒருவேளை இந்தத் தொகுதிகளை இப்போது வாங்காமல் விட்டுவிட்டால் பிறகு கிடைக்காதோ என்கிர அச்சமும் இருப்பதால் இதை தேடி வந்து முதலில் வாங்கிவிட்டேன்” என்றார்.

என்னென்ன தொகுப்புகள்? எப்போது வந்தது ?

 

 

பெரியாரின் கட்டுரைகளில் மதம் முதல் மனிதம் வரையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை கட்டுரைகளையும் சேர்த்து “பெரியார் இன்றும் என்றும் ” தொகுப்பு 2017ம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்தது.

 

அம்பேத்கர் கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு 2018ம் ஆண்டு புத்தககண்காட்சிக்கு வந்து அமோக வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து இவ்வாண்டு மார்க்சியம் “இன்றும் என்றும்” என்னும் தொகுப்பு, மூன்று பிரிவுகளாக வெளிவந்துள்ளது.

தன் வரவேற்பு குறித்தும், பரவல்தன்மை குறித்தும் விடியல் பதிப்பக விற்பனையாளர் ராமச்சந்திரன் சொல்வதை கேட்போம்.

20 முதல் 35 வயதுக்குள்ளாக இருக்கும் இளைஞர்கள் அதிகம் வருகிறார்கள். வாங்கிச் செல்கிறார்கள். இந்த ஆண்டு மார்க்சியம் இன்றும் என்றும் தொகுதி வெளியிடப்பட்டுள்ளதால் இன்னும் அதிகமான இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு விற்பனையும் , வரவேற்பும் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.

மார்க்சியம் “இன்றும் என்றும்” :
சார்லஸ் டார்வினின் “உயிர்களின் தோற்றம் ” நூலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 19ம் நூற்றாண்டின் படைப்புகளில் மிகக் கவனம் செலுத்தப்பட வேண்டியதும், விவாதங்களுக்குட்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டியதுமான படைப்பு, கம்யூனிச அறிக்கைதான் என்றது லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழ்.
1848ம் ஆண்டு வெளிவந்த அந்த கம்யூனிச அறிக்கை, இந்த 21ம் நூற்றாண்டுக்கும் எப்படி பயன்படுகிறது என்பதை விளக்கும் இந்த நூல் முதல் பகுதியாகவும்,

எந்தப் பண்டமும் அதன் பணமதிப்பைப் பார்க்கும்போது அதன் மதிப்பீட்டுக் காரணிகள் என்ன என்பதை அறியாமல்தான் வாங்கப்படுகின்றன என்பதை உலகத்தின் மண்டையில் உரைக்கும்படி சொல்லிக்கொண்டிருக்கும் மூலதனத்தை, சித்திர வடிவில் எளிமையாக இளைஞர்களுக்காக படைத்தளித்து அதை இரண்டாம் பகுதியாகவும்,

மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான பரிதி எழுதியுள்ள மார்க்சிய சூழலியலை விரிவுபடுத்தும் “மாந்தர் கையில் பூவுலகு ” என்னும் நூல் நம்மை ஆதாரங்களோடு அச்சமூட்டுவது இன்னும் சிறப்பு. இந்த பகுதியை மூன்றாம் தொகுதியாகவும் கொண்டுள்ள இந்த தொகுப்பு இந்தஆண்டு விற்பனைக்கு வந்துள்ளது.

புரட்சி உலகின் உச்சத்தில் இருக்கும் இந்த மூவரையும் இனி யார் அறிந்துகொள்ள வேண்டுமானாலும் இந்த நூல்களின் உதவியின்றி முழுமைபெறாது எனலாம்.

கடின உழைப்பில் சேர்க்கப்பட்ட தரவுகள் எல்லாம் கவனமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பிரமிக்க வைக்கும் இந்த கூட்டுமுயற்சியால், இந்த ஆவணபடுத்தலில் வென்றிருக்கிறது விடியல் பதிப்பகம். தவறவிட்ட கட்டுரைகளுகாக தர்மசங்கடத்துக்கு ஆளாகும் நிலையிலிருந்து விடியல் பிறந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி சிதறவிடக்கூடாத சிறந்த தொகுப்புகளை வழங்கி வரும் இந்த விடியல் பதிப்பகம் அடுத்த ஆண்டு என்ன செய்யும் என்பதை ஆவலுடன் உங்களைப் போலவே நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

 

Exit mobile version