தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளி…

ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கில வழி ஆரம்ப கல்வி, நடனமாடி அசத்தும் ஆசிரியர்கள் என தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது மாநகராட்சி பள்ளி ஒன்று. இதுகுறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

குழந்தைகள் அடிப்படைக் கல்வியை கற்பது தொடக்கப் பள்ளிகளில் தான். விளையாடும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செலுத்த வைப்பது சவால் தான். அதை தனியார் பள்ளிகள் செயல்படுத்துவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி, தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமையாசிரியர், உதவியாசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இங்கு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் 550 மாணவர்கள் படிக்கிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளில், மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் கவனிக்கிறார்கள். புத்தகத்தில் உள்ள பாட்டு, கதை போன்றவைகளுக்கு பெண் ஆசிரியர்கள் நடனமாடி மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துகிறார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதி இங்குள்ளதால், பெற்றோர் தங்களது பிள்ளைகளை இங்கு சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், வழங்கப்படும் அனைத்து விலையில்லா பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதால், பெற்றோர்கள் ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்களை சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆங்கில வழிக்கல்வி எட்டா கனியல்ல அது அனைத்து மக்களுக்கும் எட்டும் கனி என்பதை நிரூபித்து, அரசு பள்ளிகளை சிறப்பாக வழி நடத்தி மாணவர்களுக்கு பயனுற செய்யும் ஆசிரியர்களுக்கும், அரசு பள்ளிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Exit mobile version