தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் போலவே ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையான இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காரணமாக சென்னையின் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பால் விநியோகம் செய்யவும், மருந்து கடைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை அடுத்து, ராமநாதபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. மருந்துக் கடைகள், பால் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஆங்காங்கே காவல்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விருதுநகரில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் படி, தேநீர்கடை, காய்கறிகடை, வணிக
வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள், இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதேபோல ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி, அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 135 சோதனைச் சாவடிகள் மற்றும் மாநில, மாவட்ட எல்லைப் பகுதிகளில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரியில், ஆட்சியர் அலுவலக சாலை உட்பட அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. பால் விநியோகம், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 200 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version