கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் போலவே ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காரணமாக சென்னையின் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பால் விநியோகம் செய்யவும், மருந்து கடைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பேருந்து நிலைய சாலைகள் உட்பட அணைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பால் விநியோகம், மருந்து கடைகளை தவிர பிற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூரில் முழு ஊரடங்கு காரணமாக மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 5வது வாரமாக விருதுநகரில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு தேநீர்கடை, காய்கறிகடை, வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள், இறைச்சி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பால் நிலையங்கள் மற்றும் மருந்து கடைகள் மட்டும் எந்த தடையும் இன்றி இயங்கி வருகின்றன.
கொரோனா பரவலை தடுக்க ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.