கோவை மாவட்டத்தில் இன்று மாலை முதல் இரண்டு நாட்களுக்கும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆகஸ்ட் 2ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று மாலை 5 மணி முதல் வரும் 27ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகள் அல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனறும், ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரித்துள்ளார்.
இதேபோன்று மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதன் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், அங்கு நாளை முதல் ((26ம் தேதி முதல் )) ஆகஸ்ட் 2ம் தேதி வரை தளர்வுகள் அல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.