பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஆய்வு செய்ய 4 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு

பணியிடங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து ஆராய உள்ள அமைச்சர்கள் குழுவுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிப்பார் என, உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷீலா ஹரித் கேத்தான் தெரிவித்துள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்வதற்காக, 4 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை, கடந்த 18ம் தேதி மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த புதிய குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைவராக பதவி வகிப்பார் என, அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷீலா ஹரித் கேதான் தெரிவித்துள்ளார். இணையத்தில் மீ டூ இயக்கம் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்கள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு முறையாக இயங்கவில்லை என சமூக செயற்பாட்டாளார்கள் விமர்சித்து வந்த நிலையில், தற்போது இந்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version