சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் சாதாரணமாக பழகிய தொழிலாளி!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்கள் மற்றும் வீரர்களின் பிரியமான வேலைக்காரன் என்று சொல்லி பெருமிதம் கொள்கிறார் சென்னையைச் சேர்ந்த பாஸ்கர். அதற்கு என்ன காரணம்? பாஸ்கர் என்ன வேலை செய்கிறார்? என்பது பற்றி விவரிக்கிறது இந்தச் சிறப்புத் தொகுப்பு….

கிரிக்கெட் ஒரு மதம்…. கிரிக்கெட் வீரர்கள் அந்த மதத்தில், கடவுள்கள்… என்று சொன்னால், இந்தியாவில் அது மிகையான வார்த்தைகளல்ல. அந்தளவுக்கு இந்தியர்கள் கிரிக்கெட்டை வெறித்தனமாக ரசிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை, கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கோ… வெறும் விளையாட்டோ அல்ல. அது அவர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்துவிட்ட ஒன்று. அவர்களுக்கு மத்தியில், கிரிக்கெட் என்பது தான் வாழ்க்கை… கிரிக்கெட் என்பது தனது வாழ்வாதாரம்… என வாழ்ந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பாஸ்கர். இத்தனைக்கும் அவர் கிரிக்கெட் வீரர் அல்ல… களத்தில் நிற்கும் கிரிக்கெட் நடுவரோ, பயிற்சியாளரோ, கிரிக்கெட் நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் ஊழியரோ அல்ல. ஆனால், கடந்த 37 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டுத்தான் பாஸ்கரின் வாழ்வாதாரம். அது எப்படி? என்ன செய்கிறார் பாஸ்கர்?

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பாஸ்கருக்கு வயது 59. இவர் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் ஷூ, கிளவுஸ், காலில் அணியும் pad போன்றவற்றைப் பழுதுபார்க்கும் தொழில் செய்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் பயிற்சி எடுக்கும்போதே… விளையாடும்போதோ அவர்கள் அணிந்திருக்கும் உபகரணங்கள் பழுதானால், கிழிந்துபோனால், அவற்றை சீர் செய்து, தைத்துத் தரும் தொழிலாளிதான் பாஸ்கர்.

சேப்பாக்கம் எம்.ஏ.எம். சிதம்பரம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது, வீரர்களின் உபகரணங்களைப் பழுது நீக்கித் தரும், அதிகாரப்பூர்வ பணியாளராக பாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு போட்டி நடைபெறும் சமயத்தில், பாஸ்கருக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது.

1993-ஆம் ஆண்டில் பாஸ்கர், சேப்பாக்கம் எம்.ஏ.எம் சிதம்பரம் மைதானத்தில் இந்தப் பணியைத் தொடங்கியதாகவும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களாகவும், தலைசிறந்த வீரர்களாகவும் திகழ்ந்த அசாருதின், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ளே உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களின் உபகரணங்களை பழுது நீக்கிக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். மேலும், தனது தொழில் நேர்த்தியை அந்த வீரர்கள் பாராட்டியது, தனக்குப் பெருமையாகவும், தற்போதுவரை அது தனக்கு நிறைவைக் கொடுப்பதாகவும் பாஸ்கர் குறிப்பிடுகிறார்.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாயும், மற்ற நாட்களில் 500 ரூபாய் வரையிலும் சம்பாதித்து வந்ததாகக்கூறும் பாஸ்கர், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கால், தனக்கு முற்றிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் வேதனை தெரிவிக்கிறார். அவரது வேதனையை அறிந்த இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியதாகவும், அது தனது குடும்ப பாரத்தை பெருமளவில் குறைத்துள்ளதாகவும் நன்றியோடு பதிவு செய்கிறார்.

கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது, தனக்கான வருமானமும் மீண்டும் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பாஸ்கர்.

Exit mobile version