திருவண்ணாமலை அருகே மாட்டு வண்டிக்காக ரூ.10.75 லட்சம் செலவு செய்தவரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மார்கபந்து. பட்டுச் சேலை தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வரும் இவர் பழமை மீது தீராத காதல் கொண்டவர்.
சாதாரண கூலித்தொழிலாளி முதல் பெரு நிறுவன உரிமையாளர்கள் வரை மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது மார்கபந்துவிற்கு மாட்டு வண்டி மீது தான் ஒரு கண் இருந்தது. அந்த மாட்டு வண்டிக்காக அவர் செலவிட்ட தொகை தான் பலரையும் திகைக்க வைத்துள்ளது..ஆம்…அவர் வைத்திருக்கும் மாட்டு வண்டியில் விலை பத்தே முக்கால் லட்சம் தான்…
அந்த மாட்டு வண்டியை முழுவதும் தேக்கு மரத்தில் செய்திருக்கிறார் மார்கபந்து. ரூ.8 லட்சத்தில் வண்டி தயாரான பிறகு , ரூ.2.75 லட்சத்துக்கு இரண்டு காங்கேயம் காளைகளை வாங்கியுள்ளார் அவர்.
மாட்டு வண்டிக்கும், காங்கேய காளைகளுக்கும் தனது ஊரில் உள்ள கோவிலில் பூஜை செய்த மார்கபந்து, பின்னர் அந்த மாட்டு வண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்து ஊர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஜல் ஜல் என ஓசையுடன் மாட்டு வண்டியில் பயணிக்கும் மார்கபந்துவும் அதற்காக அவர் செலவளித்த தொகையும் தான் கிராம மக்களின் பேச்சாக இருக்கிறது.