கோவையில் பழைய புராணங்கள், திருக்குறள் உள்ளிட்ட பாடல்களை பாடி அசத்தும் 4 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஒத்தக்கால் மண்டபம் அருகே வசித்து வரும் கருணா, கீதா தம்பதியினரின் 4 வயது மகனான ராகுல்ராம் தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். கருணாவிற்கு தமிழ் மீது கொண்ட பற்றால் தனது மகனுக்கும் தமிழ் பாடல்களையும் புராணங்களையும் பயிற்றுவித்துள்ளார். தமிழில் தந்தையைப் போல் ஆர்வம் கொண்ட ராகுல் ஆயிரத்து 330 திருக்குறளையும் குறுகிய காலத்திற்குள் கற்றுத் தேர்ந்தான். இதனைக் கண்டு வியந்த ராகுலின் தந்தை அவனுக்கு ஆத்திச்சூடி, உள்ளிட்ட பல நூல்களையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அதனையும் ராகுல் ஆர்வமுடன் கற்றான். அதன் விளைவாக 4 வயதேயான ராகுல், குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 மலர்களின் பெயர்கள், 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை மனப்பாடமாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.