ஆஸ்திரேலியாவில் வளர்ச்சி குறைபாடு உள்ள சிறுவன் ஒருவனை சக மாணவர்கள் கிண்டல் செய்ததை தாங்க முடியாமல் அந்த சிறுவன் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த சிறுவனுக்கு பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய நாட்டின் பிரிஸ்பென் நகரைச் சேர்ந்தவர் யரக்கா பேலஸ். இவரது மகன் குவாடன் பிறவியிலேயே அகோண்ட்ரோபிலாசியா என்ற வளர்ச்சிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மற்ற குழந்தைகளைப் போல உடலுறுப்புகள் வளர்ச்சியடையாமல் குள்ளமாக காணப்படுகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று யரக்கா பேலஸ் மகனை வழக்கம்போல் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குவாடன் பள்ளியில் சக மாணவர்கள் தன்னை குள்ளன் என்று கேலி செய்கிறார்கள், எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று அழுதுள்ளார். அவரது தாய் எவ்வளவு சமதானப்படுத்த முயற்சித்தும் சிறுவன் அழுவதை நிறுத்தவே இல்லை
மகனுடைய இந்த அழுகையை வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்ட அவரது தாய், பள்ளியில் சக மாணவர்களின் செயலால் தன் மகன் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், பெற்றோரும் ஆசிரியர்களும் இது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிலையில் யரக்கா பேலஸ் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் குவாடனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த காமெடி நடிகரும் குவாடனைப் போல் குள்ளத்தன்மையால் பாதிக்கப்பட்டவருமான பிராட் வில்லியம்ஸ் சிறுவனைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டினார். 24 மணி நேரத்துக்குள் சுமார் 1 கோடி ரூபாய் நிதி வசூலானது. இந்த நிதியில் சிறுவனின் குடும்பத்தினரை அமெரிக்காவின் டிஸ்னி லேண்ட்டிற்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ள பிராட் இதுபோன்று வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அவதிப்படுபவர்களுக்கு உதவப் போவதாகவும் அறிவித்தார்.
ஆஸ்திரேலிய நடிகர் ஹக் ஜேக்மேன், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப், நட்சத்திர கூடைப்பந்து வீரர் எனெஸ் கேண்டர் உள்ளிட்டோரும் சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் என்பிஏவின் கூடைப்பந்து விளையாட்டை பார்வையிட சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குவாடனுக்கு மிகவும் விருப்பமான ரக்பி விளையாட்டில் சிறந்து விளங்கும் உள்ளூர் அணியான ஆல் ஸ்டார் அணியை வழிநடத்த அழைத்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்தின் மத்தியில் குவாடன் ரக்பி வீரர்களை அழைத்து சென்றார்.
தன்னுடைய மகனின் வாழ்நாளில் மிகவும் மோசமான நாளும் மிகவும் சிறந்த நாளும் அடுத்தடுத்து அமைந்துள்ளதாக தெரிவித்த யரக்கா பேலஸ் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அறக்கட்டளை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். சிறுவனின் நெஞ்சை உருக்கும் அழுகை அனைத்து மனங்களையும் கரைத்ததுடன் மிகப்பெரிய அளவில் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது