திரைப்படமாக மாறும் கணித மேதையின் வாழ்க்கை வரலாறு

மனித கம்ப்யூட்டர் மூளை என்று அழைக்கப்படும் கணித மேதையின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வெளிவர இருக்கிறது. 

கணித மேதை சகுந்தலா தேவி என்றால் இந்தியாவில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா தேவி, கம்ப்யூட்டரைவிட வேகமாக கணக்குகளை முடித்து, உலக கணித மேதைகளை ஆச்சரியப்படுத்தியவர். உதாரணமாக, 1977ஆம் ஆண்டு, சகுந்தலாதேவி, 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை, யூனிவாக்-1108 என்ற கம்ப்யூட்டரை விட, 12 வினாடிகள் விரைவாக கண்டுபிடித்து சாதனை படைத்தவர்.

இதுமட்டுமல்லாமல், சமையல் குறிப்பு, கற்பனை நாவல்கள், புதிர் புத்தகங்கள் பலவற்றை எழுதி உள்ளார். மேலும் கணித மேதை சகுந்தலா தேவி, இந்தியாவில் ஒருபால் ஈர்ப்பை பற்றி மிகவும் வெளிப்படையாக, முதலில் “The World of Homosexuals” எனும் புத்தகத்தை எழுதியவர். பெரும் புகழை அடைந்த கணிதமேதை சகுந்தலாதேவி, ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இந்த நிலையில், தற்போது கணிதமேதை சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஒன்று, இந்தியில் தயாராகி வருகிறது. அனுமேனன் இயக்கத்தில், விக்ரம் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தில், சகுந்தலாதேவியாக, பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்து வருகிறார். ஏற்கனவே, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் விருதுபெற்ற வித்யாபாலன், இந்த படத்திற்கும் விருது பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

சகுந்தலாதேவியின் வாழக்கை வரலாற்றை தழுவிய இந்தப்படம், 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களும் இந்த படத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். எல்லா துறைகளிலும், பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், பெண்களுக்கு கணிதத்திலும் பெருமை தேடித் தந்த சகுந்தலதேவி, பெண்களுக்கு சிறந்த உந்து சக்தியாகவே திகழ்கிறார்.

Exit mobile version