கோவையில் போலீஸ் Volunteer-ஆக செயல்பட்ட 61 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அரசின் உத்தரவை பின்பற்றி தன்னார்வலர்கள், சேவையில் ஈடுபட வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி, கோத்தாரி நகரைச் சேர்ந்த 61 வயது முதியவருக்கு, கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த 23-ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்ததும், அதையடுத்து கோவை ESI மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதும் தெரியவந்தது. அப்போது கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்த போதிலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், வீட்டிற்கு வந்த அந்த முதியவர், மருத்துவர்களின் அறிவுரையை கடைபிடிக்காமல், துடியலூர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கும் தன்னார்வலாராக பணியாற்றி வந்துள்ளார். அந்தச் சமயத்தில், துடியலூர் அரசு மருத்துவமனைக்கும் சென்று வந்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தத் தகவலை அறிந்து கொண்ட சுகாதாரத்துறை பணியாளர்கள், முதியவர் சென்று வந்த துடியலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவருடன் நெருங்கி இருந்த உறவினர்கள் என 32 பேருக்கு கொரானா பரிசோதனை நடத்தினர். காவல் நிலையத்தில் பணியில் இருந்த 40 காவலர்களுக்கும் கொரானா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சமூக சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக தனி நபர் ஒருவர் அலட்சியமாக செயல்பட்டதால் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்ப்பதற்காகத்தான் தமிழக அரசு, சில தினங்களுக்கு முன்பு தன்னார்வலர்கள் அரசுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியது என்றும், ஆனால், அதைப்புரிந்து கொள்ளாமல் எதிர்கட்சிகள் குறை கூறினார்கள் என்று விமர்சித்தனர். சமூக ஆர்வலரின் கவனக்குறைவால், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயமும் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதனால்தான், அரசாங்கத்துடன் இணைந்து தன்னர்வாலர்கள், தொண்டு நிறுவனங்கள் சேவை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார் என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.
தமிழக அரசு கொரோனா தொற்று நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் கிருமிநசினி மருந்து தெளிக்கப்படுகிறது. அரசாங்கம் சார்பில் கொடுக்கப்படும் உணவுகள் மற்றும் உதவிகள் தான் பாதுகாப்பானவை என்பதும், வெளி நபர்கள் கொடுக்கும் உதவிகளில் இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கிறது என்பதும் இந்தச் சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அதனால், தெரியாத ஆட்கள் கொடுக்கும் உணவுகளை நாங்கள் வாங்கி உண்ணமாட்டோம் என்றும் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர். பசியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவளிப்பது முக்கியம் என்றாலும், இதுவரை மனித குலம் அறிந்திராத கொடிய கொரோனா நோயின் தாக்கம் உச்ச நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு முறைகளையும் தன்னார்வலர்கள் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.