இன்டர்நேஷ்னல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸில் இடம்பெற்ற 5 வயது சிறுமி … யார் அந்த சிறுமி ?

5 வயது சிறு குழந்தை ஒன்று தனது அசாத்திய திறமையால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளாள். அந்த சிறுமி யார்? சிறப்பு செய்தி தொகுப்பு 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சப்படி என்னும் கிராமத்தில், தையற் தொழில் செய்து வரும் பவித்ராமன், அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பத்தை உயிர்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தான் கற்ற கலையை பள்ளி மாணவர்களுக்கு பகுதி நேரமாக கற்பித்து வருகிறார்.

இந்நிலையில், பவித்ராமன் – அனிதா தம்பதிகளின் மூத்த மகளான 5 வயது நிரம்பிய ஸ்வேதாஸ்ரீ, தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறாள். அவளது தந்தை சிலம்ப பயிற்சியாளராக இருப்பதால், வீட்டில் உள்ள சிலம்பு கம்பை குறும்புத்தனமாக எடுத்து சுற்றி விளையாடுவது அவளது வழக்கம். அதோடு நிற்காமல், தந்தை பயிற்சி அளிப்பதை பார்த்த ஸ்வேதாஸ்ரீ, தானாகவே சிலம்பத்தை பயிற்சியின்றி முயற்சி செய்து வந்தாள். இதைக் கண்ட தந்தை, சுவேதாவிற்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார். தன்னிடம் பயிலும் மாணவர்கள், பிற இடங்களில் பங்கேற்கும் போட்டிகளில் ஸ்வேதாஸ்ரீயையும் பங்கேற்க வைத்துள்ளார்.

ஸ்வேதா ஸ்ரீ சிலம்பாட்டத்தை கற்கத் தொடங்கிய சில மாதங்களிலேயே, நன்கு தேரி, கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடமும், ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம், கோவா மற்றும் சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உலக, தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளிலும் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, 5 வயதேயான ஸ்வேதா ஸ்ரீயை, சிலம்பாட்டத்தில் சிறுவயதினருக்கான உலக சாதனையாளராக்க, அவளது தந்தை பவித்ராமன் விணணப்பித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கடந்த மே மாதம்” BRAVO இன்டர்நேஷ்னல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்” புத்தகம், ஸ்வேதா ஸ்ரீயை இளம் வயது சாதனையாளராக அங்கீகரித்தது.

இவரின் சாதனையை பாராட்டும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்ட செயளாரும் தனது வாழ்த்தினை சிறுமிக்கு தெரிவித்துள்ளார். பெண் பிள்ளைகள் வீட்டின் பாரமாக இல்லாமல், பெருமை சேர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பதை, ஸ்வேதா ஸ்ரீ நிரூபித்துள்ளார்.

Exit mobile version