இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தை வரும் 16ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அதிரடியாக அறிவித்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக ரணில் தெரிவித்தார். கொழும்புவில் தனது ஆதரவுக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை, நாளை பதவியேற்கும் என்றும், அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, இலங்கைக்கான சீன தூதர் Cheng Xueyuan, ரணில் விக்கிரமசிங்கேவையும், மகிந்தா ராஜபக்சேவையும் தனித்தனியாக சந்தித்துப் பேசி உள்ளார்.
Discussion about this post