தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் கைதான கண்ணியமிக்க ஆசிரியர் இவர்தான்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்று வரும் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம், தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மில்டன் ஞானசிங் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமடைந்த அந்த மாணவி வீட்டில் பூச்சி மருந்தை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி பெற்றோர் விசாரித்தபோது, அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்காமல், ஆசிரியர் மில்டன் ஞானசிங்கை பணி நீக்கம் செய்வதாக கூறியுள்ளனர்.
இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த பெற்றோர், ஆசிரியர் மில்டன் ஞானசிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் மில்டன் ஞானசிங் பல மாணவிகளிடம் தகாத முறையில் பேசி வந்ததும், அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் மில்டன் ஞானசிங்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post