அதிமுகவில் தொண்டராக நுழைந்து, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் தடங்களைப் பின்பற்றி, அவர்களின் ஆசியோடும், கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவோடும் கழகத்தின் பொதுச் செயலாளராகி இருக்கும் ஏழைப் பங்காளன், விவசாயிகளின் தோழன், எல்லோருக்கும் எளியவர் எடப்பாடி கே.பழனிசாமியின் வாழ்க்கைப் பயணம் குறித்து பார்ப்போம்…
1954 ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து தனது பள்ளிப்படிப்பை முடித்தார். தனது 18வயது நிரம்பியபோது, எம்ஜிஆரின் மீது இருந்த பற்றால், 1974 ம் ஆண்டு அஇஅதிமுகவில் தொண்டராக இணைந்து கட்சியின் விசுவாசியாக தீவிரமாகப் பணியாற்றியதால் அதே ஆண்டே சிலுவம்பாளையம் கிளைக்கழகச் செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமியைத் தேடி வந்தது.
பின்னர் 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதா அணியில் இருந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1991 ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அதே எடப்பாடி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1996 சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு, 1998 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லிக்கு எம்பியாகச் சென்றார்.
2011ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆட்சிக்காலத்தில்தான், முதன்முறையாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவி வழங்கினார் ஜெயலலிதா. அதேபோல, 2016ம் ஆண்டும் 4வது முறையாக எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலிலும் வெற்றியைக் கைப்பற்றி, மீண்டும் நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரானார். மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் என்றுமே மாற்றப்படாத அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பது கூடுதல் தகவல்.
பின்னர், 2017ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார்.
2021ம் ஆண்டு தேர்தலில் 65 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறவைத்து, தமிழகத்தின் பலம்மிக்க எதிர்க்கட்சித்தலைவர் ஆன எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அம்மா வழிவில் ஆட்சி நடத்திய எடப்பாடியாரின் அந்த ஆளுமையைக் கண்ட தொண்டர்கள், தற்போது புரட்சித்தலைவியைப் போலவே, அதிமுகவையும் ராணுவக்கட்டுப்பாட்டோடு நடத்த எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்று அவர் பக்கம் தங்கள் ஏகோபித்த ஆதரவுகளைக் கொட்டினர்.
2022ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதிமுகவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
2023 -ல் ஒன்றறை கோடி தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வானார்….
கிளைக்கழக செயலாளர், மாவட்ட செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று படிப்படியாக உழைப்பால் உயர்ந்து தற்போது கழகத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.
Discussion about this post