புரட்சித்தலைவர் மறைந்த பின்னர், அதிமுகவுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்துக்கும் குறிப்பாக பெண்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் வகையில் 1992ல் தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டுவந்ததன் மூலம் பெண் சிசுக்கொலை குறைந்தது.
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், 50 ஆயிரம் ரூபாயும் இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25 ஆயிரம் ரூபாயும் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் மூலம் திருமண உதவித் தொகையாக 50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கினார்.
அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசின் பரிசாக, சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பூ, குழந்தைக்கான ஆடை உள்ளிட்ட 16 பொருட்கள் வழங்கும் ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்’ என்ற புதிய திட்டத்தை, 2015 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. ஏழை வீட்டுப் பெண்களுக்கு இத்திட்டம் தாய் வீட்டு சீதனம் போல அமைந்ததை மறுப்பதற்கில்லை.
பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண்களை மட்டுமே கொண்ட சிறப்புப் பெண்கள் அதிரடிப் படையும் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்டவையே.
முத்தாய்ப்பாக பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார் ஜெயலலிதா.
திமுக ஆட்சிக் காலத்தில் அரசியலில் இருந்த பெண்கள் மீதான தாக்குதல்களைக் கண்டு அரசியலில் கால் பதிக்க பெண்கள் தயங்கி நின்ற காலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதுதான் அரசியலில் கால்பதிக்க பெண்கள் எடுத்து வைக்கும் முதல் படி என எடுத்துக் கூறியவர் ஜெயலலிதா. இதைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இன்று தமிழகத்தில் இத்தனை பெண் மேயர்கள், சரிக்கு சமமாக பெண் கவுன்சிலர்கள், பேரூராட்சித் தலைவர்கள் இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா மட்டுமே.
மகப்பேறு கால உதவித்தொகையை ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தினார் ஜெயலலிதா. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை அறிவித்த புரட்சி தலைவி, வெற்றி பெற்றபிறகு அதை வழங்கியும் காட்டினார். விளிம்புநிலைக் குடும்பங்கள் பலவற்றில் இன்னும் ஜெயலலிதா வழங்கிய மிக்ஸியும் கிரைண்டருமே, அவர்களின் அன்றாடத்தைச் சிக்கலில்லாமல் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதுபோல மகளிர் முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
Discussion about this post