கடந்த 11 நாள்களில் திருநெல்வேலியில் மட்டும் 10 கொலைகள் அரங்கேறியுள்ளன. விடியா ஆட்சியில் மக்கள் தங்கள் பாதுகாப்பு உணர்வை இழந்து, தினமும் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
“அமைதிப் பூங்கா” என்ற பெயரை தமிழகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் நாளிதழ்களையும், செய்திச் சேனல்களையும் கொலை, கொள்ளை செய்திகள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. அதிலும் தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலை செய்திகளை பார்க்கையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் லட்சணம் சந்தி சிரிக்கும் வகையில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 11 நாள்களுக்குள்ளாக 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லை கொக்கிரகுளத்தை அடுத்த கீழ வீரவராகபுரத்தைச் சேர்ந்த முகேஷ் எனும் தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், சொந்தமாக ஜே.சி.பி., லாரி, செங்கல் சூளை உள்ளிட்டவை வைத்துள்ளார். இந்த நிலையில் வீரவநல்லூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில், வெடி வெடிக்கும்போது, குமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5பேர் கொண்ட கும்பல், 2 பைக்கில் சென்று ஓட ஒட விரட்டி சரமாரியாக அறிவாளால் வெட்டி குமாரை கொலை செய்துள்ளனர்.
இதுபோல மற்றொரு சம்பவத்தில், கீழநத்தம் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டின் சுயேட்சை கவுன்சிலராக இருந்தவர் ராஜாமணி. வீட்டில் உள்ள கால்நடைகளை அப்பகுதியில் இருக்கும் பாலம் அருகே மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
நெல்லை சுத்தமல்லி அருகே, கருத்தப்பாண்டி என்பவர் வளர்த்து வந்த நாய், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி கொம்பையாவின் மகளைக் கடித்துள்ளது. இதில் இரு குடும்பத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கருத்தப்பாண்டி, கொம்பையாவை கொலை செய்துள்ளார்.
நெல்லை மேலநத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர், தனியார் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற மாயாண்டியை வழிமறித்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவனையும், அவரது சகோதரியையும் சக பள்ளி மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவமும் அரங்கேறி அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது. இத்தனை கொலைகளைக் கண்டு நெல்லை மாவட்டமே ரத்த பூமியாக காட்சியளிக்கிறது. ஆனாலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஊரை நம்ப வைக்க நாடகமாடி வருகிறார் ஸ்டாலின்.
Discussion about this post