இந்திய சுதந்திரத்தின் 77ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் இந்நாளில் பெற்ற சுதந்திரத்தை நாம் எப்படி பேணிக் காக்கிறோம் என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு..
இன்று 77வது சுதந்திர தினக் கொண்டாட்டம்… பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் என அத்தனை இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்படும்… சட்டைப் பைகளில் மூவர்ணக் கொடியினை குத்திக் கொள்வது, முகத்தில் வரைந்து கொள்வது, வாகனங்களில் கட்டிக் கொள்வது என தேசப்பற்று வீதியெங்கும் பெருகி ஓடும். செல்போன்களில் தேசப்பற்றுப் பாடல்கள், காட்சிகள், வாழ்த்துகள் பகிரப்படும்.
ஆனால் பிரிட்டிஷாரிடம் இருந்து எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் பெற்று நமக்களித்த இந்த சுதந்திரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்… நமக்குள்ள சுதந்திரத்தை வைத்து நாம் எத்தனை பேரை அடிமைகளாக்கி வைத்திருக்கிறோம் என்று சுதந்திர தினத்தில் நாம் ஒரு நிமிடம் கூட சிந்திக்கவில்லை என்பதே உண்மை…
அன்னியர் ஆட்சியின்போது, எங்கள் நாடு என்னும் ஒற்றை உணர்வோடு அனைவரும் சாதி, மத, இன துவேஷங்கள் இன்றி ஒன்றுபட்டு போராடினோம். அனைத்து மக்களுக்கான சுதந்திரத்துக்காக ஒவ்வொரு இனத்தினரும், மதத்தினரும் நாங்கள்தான் உயிர்கொடுத்தோம் என்று பெருமை கொள்வதற்காக போராட்ட வேள்விக்கு குருதியை கொடையாக்கி பரங்கியர் துப்பாக்கிக்கு குண்டுகளை நெஞ்சில் தாங்கினோம்…
இவையெல்லாம் 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் பெற்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்று இந்தியாவுக்குள்ளேயே ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனி என்பது போல நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாநிலங்களுக்குள் இருக்கும் மக்களுமே சாதி, மத, இன துவேஷங்களைப் ஆராதிக்கும் மனப்பான்மையோடு இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
மணிப்பூரில் நடைபெறும் கலவரங்களுக்கும், வடமாநிலங்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களும், தமிழகத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கும் சாதித் துவேஷ சம்பவங்களும் இதனையே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தின் விளைவோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
சுதந்திர இந்தியாவை கூறுபோட அன்னிய சக்திகள் நேரம் பார்த்துக் கொண்டிருக்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் இன்று நமக்கிடையே இருக்கும் பிரிவினைகளும், அதன் காரணமாக ஆண்டான், அடிமை என்னும் மனப்போக்குடன் நடப்பதும், அன்னிய சக்திகளின் வேலையை எளிதாக்கி உள்ளது.
பொருளாதாரத்தை காரணம் காட்டி ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடு பார்ப்பதை விட, சாதியைக் காரணமாக்கி பார்க்கப்படும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வர்க்கப் பாகுபாடும், அது தொடர்பான உயிர்க் கொலைகளும் நாம் பெற்ற சுதந்திரத்தையே கேலிக்குரியதாக்கி உள்ளது என்பதே உண்மை. இன்றைய சுதந்திர தினத்திலாவது இத்தகைய இழிவுகளை களைவோம் என்று உறுதி ஏற்போம்… சுதந்திரத்துக்காக உயிர்நீத்தவர்களின் தியாகங்களுக்கு உரிய மரியாதையை அளிப்போம்.
Discussion about this post