போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பெற்ற பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளது பற்றியும், உதவியாளர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாகத் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
மூன்றாவது நாளாக தொடரும் விசாரணை!
சட்ட விரோத பணம் பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்க துறையால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கீழமை நீதிமன்றம் நடுவர் அல்லி, 12 ம் தேதி வரை போலீஸ் காவல் கொடுத்ததை எடுத்து, நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 3 மணியிலிருந்து நான்கு மணி வரையிலும், இரவு 7 மணியிலிருந்து 11 மணி வரையிலும் செந்தில் பாலாஜியிடம் 50க்கும் அதிகமான கேள்விகளை முன் வைத்து விசாரணை நடத்தினர். இவற்றில் எந்த கேள்விகளுக்கும் செந்தில் பாலாஜி பதிலளிக்காததால், 11 மணியுடன் விசாரணையை முடித்த அமலாக துறையினர், இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தது குறித்து, உரிய ஆதாரங்களுடன் செந்தில் பாலாஜியை கைது செய்து உள்ள அமலாக்க துறையினர், விசாரணையில் கேட்கப்படும் கேள்விக்கு முறையாக பதில் அளிக்காமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12ஆம் தேதி வரை மட்டுமே போலீஸ் காவல் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரின் கேள்விகளுக்கும், விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து அமலாக்கத்துறை நடவடிக்கைகளை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post