தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 377 எச்.ஐ.வி பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், மத்திய சிறைச்சாலை மருத்துவமனைகள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இவற்றில் 186 மையங்களை மூட வேண்டும் என்று மத்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏற்கனவே, உலக சுகாதார நிறுவனம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆலோசனை மையங்களையும், பரிசோதனைக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.
எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூடினால், தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் முற்றிலும் முடங்கிவிடும். அதேபோல, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வும், எய்ட்ஸ் தொற்றாளிகளுக்கு கிடைக்கும் ஆலோசனைகளும் கூட தடைபட்டுவிடும்.
மேலும், 2500 தொழிலாளர்களின் வேலை பறிபோகும் நிலையும் ஏற்படும். எனவே, சிறந்த மருத்துவ சேவைகளையும், மருத்துவத்துறையின் நோக்கங்களையும் சிதைக்காமல் இருக்க தமிழக அரசானது இடமளிக்கக்கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்களும் சில அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எய்ட்ஸ் மையங்களை மூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
மூடப்படும் 186 மையங்கள்…! ஆர்ப்பாட்டம் செய்யப்போகும் ஊழியர்கள்..!
இந்த எச்.ஐ.வி. நம்பிக்கை மையங்களில், 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட மத்திய அரசு சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் வேலூர் நகர்புற மருத்துவமனை மற்றும் மாவட்ட காசநோய் மையம் ஆகியவற்றில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை மூடினால் வேலூர் நகரில் எச்.ஐ.வி பரிசோதனைக்கு வரும் மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். எனவே நம்பிக்கை மையங்களை மூடும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மு.ஜெயந்தி கூறியதாவது:- தமிழகத்தில் 186 மையங்களை மூட வேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் சுற்றரிக்கை கடந்த 5-ந் தேதி அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
Discussion about this post