செந்தில் பாலாஜியின் மீது ரெய்டு வந்ததிலிருந்து தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை அனைத்து இடங்களிலும் புகழ் வெளிச்சம் பெற்றுவிட்டது. முக்கியமாக திமுகவினர் அமலாக்கத்துறை என்றால் எப்படி இருக்கும்? அதன் வேலை என்ன? என்று நன்றாக தெரிந்திருப்பார்கள். பொதுமக்களிடமும் சில கேள்விகள் எழாமல் இல்லை. அமலாக்கத்துறை, ரெய்டு சென்று முடக்கிய சொத்துக்களை என்ன செய்யும் யாருக்கு கொடுக்கும்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த எட்டு ஆண்டுகளில் அமலாக்கத்துறையின் செயல்பாடு!
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை காலக்கட்டத்தில் அமலாக்கத்துறையினரால் 112 வழக்குகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அடுத்த எட்டாண்டுகளில், அதாவது 2014 முதல் 2022 வரை 3010 வழக்குகளும் விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இருபத்துயேழு மடங்கு அதிகம் என்று சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022 மார்ச் 31ம் தேதி வரை அமலாக்கத்துறையினரால் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் வங்கி மோசடி மற்றும் போன்சி வழங்குதல் தொடர்பாக மட்டும் ஐம்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
முடக்கிய பணத்தை என்ன செய்யும்?
அமலாக்கத்துறையினரால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை விற்றதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு 23,000 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படி முடக்கப்படும் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் ஆறு மாதங்கள் மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும் எந்தக் குற்றத்திற்காக சொத்துக்கள் முடக்கப்பட்டன என்பதை ஆறு மாதங்களுக்குள் அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அமலாக்கத்துறையிடம் இருந்து சொத்துக்கள் விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் தேசிய தீர்ப்பாயத்தில் மனு அனுப்பி விடுவிக்கப்பட்ட சொத்துக்களை திரும்ப பெற்றுவிடலாம். அதே நேரம் நீதிமன்றத்தில் குற்றமானது நிரூபிக்கப்பட்டால், முடக்கப்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிடும்.
Discussion about this post