இந்தியாவைப் பொறுத்தவரை தக்காளியின் விலையானது அபரிமிதமானதாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு பெட்டித் தக்காளியின் விலை 1400 முதல் 1500 வரை விற்கப்படுகிறது. இது இப்படி இருக்க தற்போது சென்னையில் மீன்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மீன்கள் விலை உயரக் காரணம் என்ன?
தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ஆ,ம் தேதி முதல் கடந்த ஜூன் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் மீன்கள் வரத்து பாதிக்க்ப்பட்ட நிலையில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. தடைக்காலம் ஒய்ந்த நிலையில் மீன்கள் வரத்து சீரானது. விலையும் கணிசமாக குறைந்தது. இப்போது என்ன சிக்கல் என்றால், அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்கால்த்தால் வரத்து பாதித்திருக்கும் நிலையில் சென்னையில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் விடுமுறை நாளான நேற்று காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப் பெட்டை, திருவான்மியூர், காவாங்கரை, பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மீன்கள் விலை தாறுமாறாக இருந்த காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துதான் போனார்கள்.
மீன்கள் விலை எவ்வளவு?
ஞாயிறு என்றாலே மக்கள் தங்களது வீடுகளில் கறிக்குழம்பு வைக்கவே அதிகம் பிரியப்படுவார்கள். அப்படி மக்கள் அதிக ஆர்வத்துடன் கறிக்கடைகளில் திரண்டு வந்து கறிகளை வாங்குவார்கள். குறிப்பாக நேற்றைய தினம் மீன் வாங்குவதற்காக அலைமோதிய மக்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் மீன்வகைகளான வஞ்சரம், வவ்வால் போன்ற மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சரம் 1300 ரூபாயிலிருந்து 1400 வரை விற்பனை ஆகியுள்ளது. சங்கரா 700 முதல் 750 வரை விற்பனை ஆகியுள்ளது. அதே போல வவ்வால் மீன் 800 முதல் 820 வரை விற்பனை ஆகியுள்ளது. இறால் 600 முதல் 650 வரையும், கிழங்கான் மீன் 450 வரையிலும் பிற மீன்கள் தாறுமாறான விலையில் விற்பனை ஆகியுள்ளது. ஊளி, கிளிச்சை போன்ற சிறிய மீன்களின் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை. அதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப மீன்களை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள்.
விலை குறைய வாய்ப்பே இல்லை..!
மீன்கள் விலை அதிகரித்துள்ளது சம்பந்தமாக சென்னை வான்கரம் மீன் மார்க்கெட்டினர் தெரிவித்த செய்தியின்படி, பொதுவாகவே சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் தேவைக்காக வெளி மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுவது வாடிக்கை. ஆனால் அரபிக்கடலில் இந்த முறை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அங்கிருந்து மீன்கள் வரத்து இல்லை. இதனால் மீன்கள் விலையானது அதிக அளவு உயர்ந்துள்ளது. வர்த்து சீராகும் வரை மீன்கள் விலை குறைய வாய்ப்பே இல்லை என்று அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதுபோன்ற உணவுப்பொருள் பிரச்சினைகளுக்கு அரசு உடனடி தீர்வு வழங்காமல் மெத்தனபோக்கில் ஈடுபட்டுவருவது மக்களுக்கு வேதனையினை அளிக்கிறது. ஏற்கனவே தக்காளி விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்த நிலையில் மலிவு விலையில் கிடைக்கும் மீன் கூட விலை உயர்ந்திருப்பது ஏழை எளிய மக்களை மிகவும் சிரமித்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இதற்கான மாற்று நடவடிக்கையினை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.
Discussion about this post