தூத்துக்குடி ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பின்வருமாறு தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
கோயமுத்தூரின் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் அவர்கள் நேற்றைய தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு எனது அஞ்சலி. அவரது மரணம் தற்கொலையா? இல்லையா? என்று விசாரிக்க இந்த அரசு சிபிஐ விசாரணையைத் தொடரவேண்டும். ஏனென்றால் அவருக்கு எந்தவித குடும்ப கஷ்டங்களும் இல்லை என்று காவல்துறையினரே தெரிவிக்கிறார்கள். அதனை மீறியும் அவருக்கு எதாவது மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அதனைப் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். இன்றைய தினம் காவலர்கள் அதிக மன அழுத்ததில் உள்ளார்கள். அவர்களுக்கு உரிய ஓய்வுக் கொடுக்க வேண்டும். இந்த அரசு காவலர்களுக்கு சரியான ஓய்வுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அண்ணா திமுக ஆட்சி காலத்தில் பெங்களூர் உமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து காவலர்களுக்கு நலத்திட்டமும், மன அழுத்தத்தைக் குறைக்க வழிவகையும் செய்யப்பட்டது. காவலர்கள் பணி என்பது புனிதமானப் பணி ஆகும். ஆனால் தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் காவலர்களைப் பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பின்வருமாறு பேசியுள்ளார்.
அமைச்சர் ரகுபதி அவர்கள் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர். ஏற்கனவே அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவருக்கு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு தகுதி கிடையாது. ஆனால் இவருக்கு கீழ் ஊழல் தடுப்புத்துறை உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஒருவரிடையே இந்தத் துறை இருப்பது எப்படி நியாயமாகும். ஏற்கனவே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தபோது பதினைந்து திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அப்போது பல வாய்தாக்கள் வாங்கி தப்பிக்கொண்டே வந்தனர். தற்போது அவர்கள் ஆட்சி வந்ததும் ஊழல் வழக்குகளில் இருந்து எளிதாகத் தப்பி வருகின்றனர். இது முறையல்ல. முக்கியமாக சட்ட அமைச்சர் ரகுபதி ஊழல் குற்றச்சாட்டைப் பற்றி பேசுவதற்கு துளியும் தகுதி அற்ற நபர்.
Discussion about this post