சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை சேதமடைந்து, நாய்கள் சவாரி செய்யும் பாதையாக மாறியுள்ளது. கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து அனாமத்தாக விடப்பட்ட நடைபாதையின் நிலைமை குறித்து பார்க்கலாம்.
விடியா ஆட்சியில் பயங்கர விளம்பரங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த மரப்பாலம் தற்போது பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது.
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்கும் வகையில் ரூபாய் 1 புள்ளி 14 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது மரப்பலகையால் ஆன பாலம். கடந்த நவம்பரில் திறக்கப்பட்ட இந்த பாலம், டிசம்பரில் கரையைக் கடந்த மாண்டஸ் புயலின்போது சேதமடைந்தது. அப்போதே இது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் மீண்டும் சீரமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட இந்த மரப்பாதையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மரக்கட்டைகள் அனைத்தும் சேதமடைந்து, மாற்றத்திறனாளிகளின் சக்கர நாற்காலி செல்வதற்கு சிரமமான வகையில் மாறி உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் மரப்பாதையில் சிலர் தங்களது வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்வதும், மரப்பாதையின் கம்பிகள் மீது அமர்ந்து சேதப்படுத்தியும் உள்ளனர். மேலும், இதைப் பயன்படுத்த வெறும் இரண்டு சக்கர நாற்காலிகளே வைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களில் கடற்கரையை காண வரும் பல மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனால் மரப்பாதை அமைக்கப்பட்டதற்கான பயனை இழந்து காட்சியளிக்கிறது.
மேலும் இரவு நேரத்தில் குடித்துவிட்டு மரப்பாதை தடுப்பு பலகைகளை, மது போதை ஆசாமிகள் உடைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை இங்குள்ள துப்புரவுப் பணியாளர்கள் முன்வைக்கின்றனர். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் அதன் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மரப்பாதையை, இப்படி பராமரிப்பின்றி விடுவதால் யாருக்கு என்ன லாபம் என மாற்றுத்திறனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்…
– செய்தியாளர் மு.முருகேசன், ஒளிப்பதிவாளர் பிரேம் மற்றும் சித்தார்த்.
Discussion about this post