திராவிட மாடல் ஆட்சியில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையில், கடந்த 2 வாரங்களில் மட்டும் 8 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இத்தகைய மலக்குழி மரணங்களை சமூக நீதி காவலர் என தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
திடீரென்று பரபரப்பான விஷச்சாராய உயிரிழப்புகள் ஒட்டுமொத்தமாக தமிழகத்தினை அதிர்ச்சியில் ஆழ்த்த, கள்ளச்சாராயத்தை கட்டுபடுத்த தவறிய திமுக ஆட்சியின் கையாலாகாத்தனம் குறித்து மாநில மக்கள் அதிருப்தியும் ஆவேசம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படி அதிக எண்ணிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் களேபரத்தை உண்டுபண்ணிய நிலையில், அவ்வப்போது அரங்கேறி வருகிற மலக்குழி மரணங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்னும் குமுறல் வெடித்துள்ளது.
ராணிப்பேட்டையில் தனியார் தோல் தொழிற்சாலையில் தமிழ்செல்வன், திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் தூய்மைப் பணியாளர் கோவிந்தன் மற்றும் சுப்புராயலு, புழல் பகுதியில் பாஸ்கரன் மற்றும் இஸ்மாயில், கடலூரில்,கிருஷ்ணமூர்த்தி, பாலசந்தர், சக்திவேல் ஆகிய மூவர் என 8 பேர் கழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.
இவையெல்லாம் கடந்த 2 வாரங்களுக்குள் அரங்கேறியுள்ள மலக்குழி மரணங்கள்… இவை பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாதது தான் இங்கு பெரிய அரசியலே அடங்கியிருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் 8 மாதங்களில் மட்டும் 15 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழகத்தில் நிகழ்ந்த மலக்குழி மரணங்களை சுட்டிக்காட்டி, அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை. நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் இதற்கெல்லாம் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதையே அடுத்தடுத்து அரங்கேறி வரும் மலக்குழி மரணங்களும் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
மனித மலத்தை மனிதர் அள்ளுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில், சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, இந்தத் தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக ஆட்சியில், கழிவுநீர் அகற்றும் ரோபோவை வாங்கி மாநகராட்சிகளுக்கு கொடுத்தார் அப்போதைய அமைச்சர் எஸ்பி.வேலுமணி. ஆனால், அதையெல்லாம் ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை.
இப்படி 2 வாரங்களில் 8 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது. திராவிட மாடல் என்றுகூறிக் கொள்ளும் திமுக ஆட்சியில் இன்னமும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் துயரம் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இபடி மலக்குழி மரணங்களை கண்டுகொள்ளாமல், இருப்பதுதான் ஸ்டாலினின் சமூக நீதியா என்னும் அதிருப்தி குரல்கள் வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. சாது மிரண்டால் காடுகொள்ளாது என்பார்கள்… இதோ சாதுக்கள் பொங்கி எழத் தொடங்கி இருக்கிறார்கள்… அது ஆட்சிக்கட்டிலை கீழே தள்ளிவிடும்.
Discussion about this post