ஒருவழியாக முடிவுக்கு வந்த திமுகவின் 2 ஆண்டுகால ஆட்சி குறித்தும், திமுகவிடம் மக்கள் எதிர்பார்த்தது என்ன? திமுக அரசு மக்களுக்கு கொடுத்தது என்ன? என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்போம்…
சமத்துவத்தை,சமூகநீதியை பேணிக்காப்போம், சட்டம் ஒழுங்கு முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்..யார் தவறு செய்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்…
இவையெல்லாம், ஆட்சிக்கு வருவதற்கு முன் ஸ்டாலின் தன் வாயில் உதிர்த்த முத்துக்கள்…இப்படி மயக்கும் வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்பிற்கு வந்து இரு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது நெஞ்சிலே நஞ்சும் நாவிலே தேனும் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான திமுக
ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் மக்களின் நன்மதிப்பை இழந்த ஆட்சி என்பதுதான் திமுக செய்திருக்கும் ஒரே சாதனை….
திமுக இன்னும் திருந்தலப்பா … என்று ஏற்கனவே முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர் வாக்களித்த மக்கள். வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்பேன் என்று சொன்னவர்களின் ஆட்சியில் இன்று முதல்வரின் மகனும், மருமகனும் மட்டுமே சேர்ந்து இரண்டே ஆண்டுகளில் 30ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார்கள் என்பதைக் கேட்கும்போது நெஞ்சே அடைக்கிறது. ஆளும் அரசின் நிதி அமைச்சரே சொன்ன இந்த குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல், கூலாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் அரசு அலுவலரையே வெட்டிப் படுகொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தில இன்று விஏஓக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கி கேட்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். இதெல்லாம் ஒரு ஆட்சியா?
சமூக நீதியைக் காக்கும் பெரியாரின் பேரன் என்று லேபிள் ஒட்டிக்கொண்டு சுற்றும் ஸ்டாலின் ஆட்சியின் உண்மை முகத்தை வேங்கைவயல் சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியதை பார்க்க பெரியார் இருந்திருந்தால் தன் தடியாலேயே தட்டிக்கேட்டிருப்பார்.
விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு, மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் முடக்கி, மின்சார கட்டணம்,சொத்து வரி, பால் விலை என எல்லாவற்றையும் உயர்த்தி பச்சைக் குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோர் வயிற்றிலும் அடித்திருக்கிறது விடியா திமுக.
ஜிம்முக்குப்போவது, வாக்கிங் ஜாக்கிங் போவது, டீ குடிப்பது என்று செல்லுமிடமெல்லாம் கேமிரா சகிதமாகய் வலம்வந்து, வித விதமாய் விளம்பரம் செய்து டிராமா போட்டுக்கொண்டிருக்கத்தான் முதல்வர் ஆனாரா ஸ்டாலின்?
தமிழ்நாட்டை சீர்தூக்கிக்காட்டும் வகையில் ஈரோடு இடைத்தேர்தலில் பட்டி பார்முலாவை இன்ரோடியூஸ் செய்து, மக்களை கேவலப்படுத்தியது..
பெண்களுக்கான அரசு என்று வாய்கிழியப் பேசிவிட்டு, ஓசி டிக்கட் என்று அவமானப்படுத்தியது முதல் தங்கை அனிதாவிற்காக நீட் தேர்வு ரத்து என்று சொல்லி நீட்டை நீட்டாக மறைத்தது வரை, தொட்டவை எல்லாவற்றிலும் தில்லாலங்கடிகளுக்கு பஞ்சமில்லாதது தான் இந்த திராவிட மாடல் அரசு…
உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும், 30 ஆயிரம் கோடி அடித்தவர்கள் கம்பி என்னித்தான் ஆகவேண்டும்… என்பதுதான் இந்த 2 ஆண்டுகால திமுக ஆட்சியின் முக்கிய ஸ்லோகனே..
ஆக, ஒருவழியாக முடிவுக்கு வந்த திமுகவின் 2 ஆண்டுகால ஆட்சியில், திமுகவிடம் மக்கள் எதிர்பார்த்தது என்ன? திமுக மக்களுக்கு கொடுத்தது என்ன?என்ற கேள்விக்கு மக்களின் ஆழ் மனதில் பதில் ஒளிந்திருக்கிறது.. அதை தகுந்த நேரத்தில் வெளிப்படுத்த காத்துக்கொண்டிருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.
Discussion about this post