பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இணைய வழி முன்பதிவு செய்யும் நபர்களிடம் மோசடி செய்து ஒரு கும்பல் பணம் பறிக்கிறது அதனால் கவனமாக இருக்க வேண்டுமென தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இந்த மோசடி தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற வழிப்பாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக கூறி போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு பக்தர்கள் ஏமாற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விரும்பும் பக்தர்களைக் குறிவைத்து போலி இணையவாசிகள் இந்த மோசடியை செய்கின்றனர்.
மோசடி செய்பவர்கள் தங்களை ஹெலிகாப்டர் புக்கிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் போல் காட்டிக்கொண்டு, முன்பதிவைத் தொடர பக்தர்கள் பணம் செலுத்தும் விவரங்களைப் பற்றி விவாதிக்கின்றனர். மேலும், மோசடி செய்பவர்கள் இந்திய தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனமாகத் தோன்றுவதற்காக புனித ஆலயங்கள் அல்லது தெய்வத்தின் படங்களைக் காட்டுகின்றனர்.
இறுதியாக, மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் யுபிஐ மூலம் பணம் செலுத்துமாறு கேட்கிறார்கள் மற்றும் பணம் செலுத்தியவுடன் போலி டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு அனுப்புகின்றனர். இதற்குப் பிறகு, மோசடி செய்பவர்கள் தங்கள் தொலைபேசிகளை அணைத்துவிட்டு, பக்தர்கள் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
எப்போதும் நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் நிறுவனத்தின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கவும். சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள்/செய்திகளின் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். மோசடி நபர்கள் குறித்தி சைபர் க்ரைம்க்கு தகவல் தெரிக்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post