5வயது சிறுமியிடம் பாலியல் வக்கிரத்தை அரங்கேற்றிய திமுக கவுன்சிலரின் கொடூரத்தால் பதைபதைத்து கிடக்கிறது தமிழகம். அனிதாவுக்காக குரல் எழுப்பிய அண்ணன்கள், சிறுமிக்காக குரல் எழுப்புவார்களா? ஒன்றுகூடுவார்களா? என்பது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
அம்மா… வலிக்குதும்மா… ரத்தம் வருதும்மா என்று அந்த 5 வயது குழந்தை சொல்வதைக் கேட்டு பெற்றதாயின் ஈரல்குலை நடுங்கிக் போய்விட்டது. பதறி அடித்து, குழந்தையின் பிறப்புறுப்பை பார்த்த தாயார் அலறித்துடித்துள்ளார். குட்டித்தேவதைகள் உலாவரும் விருத்தாசலம் சக்தி நகரில் உள்ள வைத்தியலிங்கா மழலையர் பள்ளிக்குத்தானே மகளை அனுப்பிவைத்தோம்… அங்கு இந்த கொடூரத்தை அரங்கேற்றிய மிருகம் யார்? கேள்விகள் ஒருபக்கமும், கவலை மறுபக்கமும் சூழ அரவையில் சிக்கிய கரும்பாய், சைக்கோ சாத்தானின் பிடியில் சிக்கிய மகளை கண்ணீர் மழையில் நனைத்தபடி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அந்த தாய்.
ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு தையல்கள்… பூவிதழின் மீது பொக்ரான் அணுகுண்டு போட்டது போல… அப்படித்தான் அந்த தாயாருக்கு தோன்றியிருக்கும்… எத்தனையோ ரணங்களுக்கு மரத்துப் போன மனமாய் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் மனத்தையும் அறுத்துப்போட்டது சிறுமிக்கு நேர்ந்த துயரம். தையல் இட்டு சிகிச்சை அளித்ததோடு, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்துள்ளனர்.
எவ்வளவு துன்பமும் துயரமும் மற்றவர்களுக்கு நேர்ந்தாலும் காக்கி உடுப்புகள் எந்த கண்ணீருக்கும் கரைவதில்லைதான். அது சிறுமியின் விஷயத்திலும் அரங்கேறியிருக்கிறது. என்ன நடந்தது என்றுஏனோ தானோவாக கேள்வி கேட்க, சிறுமியோ சார் சார் என்று கூறியிருக்கிறார். அதற்கும் அலட்சியத்தை பதிலாக்கியிருக்கிறார்கள் போலீசார். ஆனாலும் பெற்றோரும் சிலரும் அழுத்தம் கொடுக்க, பள்ளியைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்களை காட்டி, அது யார் என்று போலீசார் விசாரித்தபோது, சிறுமி கையைக் காட்டியது பள்ளியின் தாளாளரான திமுக கவுன்சிலர் பக்கிரிசாமியின் புகைப்படத்தை…
விருத்தாசலம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தான் 55வயது பக்கிரிசாமி. 5 பெண் குழந்தைகளுக்கு தந்தை, பேரக்குழந்தைகளுக்கு தாத்தா என இருந்து கொண்டு பக்கிரிசாமி நடத்திய பாலியல் வக்கிரம் இப்போது அம்பலமாகி உள்ளது. திமுக கவுன்சிலர் என்னும் பதவி அதிகாரமே, அவர் நடத்தும் பள்ளியில் வைத்தே இந்த அசிங்கத்தை அரங்கேற்றவும் வைத்திருக்கிறது.
பக்கிரிசாமிதான் அந்த வக்கிரசாமி என்பது தெரிந்ததும், அவரை விசாரிப்பதாக காவல்நிலையம் அழைத்து வந்தவர்கள் சிரித்து சிரித்து பேசியிருக்கிறார்கள் பல்லை காட்டியபடி. அதே நேரம் பக்கிரிசாமிக்கு ஆதரவாக செயல்பட நினைத்த போலீசார், சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என்று பேரம் பேசும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள் சிறுமியின் பெற்றோரிடம். தொடர்ந்து பக்கிரிசாமியை மறுநாள் வரும்படிக் கூறி ஹாயாக வீட்டுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்…
ஆனால் விவகாரம் வில்லங்கமாகி, சிறுமிக்கு எதிரான கொடூரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான், பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள் போலீசார். எதிர்க்கட்சியினரின் நெருக்கடி காரணமாக விடியா ஆட்சியின் முதலமைச்சரோ, தனது கட்சியில் இருந்து பக்கிரிசாமியை நீக்குவதாக ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
இப்போது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்விகள் எல்லாம் ஒன்றுதான்… இந்த வக்கிர மிருகம் இதுவரை எத்தனை பிஞ்சுக் குழந்தைகளை பதம் பார்த்திருக்கிறது. யாரும் புகார் அளிக்கவில்லையா? அல்லது ஆளும் கட்சியின் கவுன்சிலர் என்னும் அதிகாரத்தாலும், பணபலத்தாலும் புகார்கள் எல்லாம் மூடி மறைக்கப்பட்டிருக்கிறதா? தனது கட்சியில் இருந்து மட்டும் தூக்கிவிட்டால், பக்கிரிசாமிக்கு தண்டனை கொடுத்தது போல ஆகிவிடுமா? விடியா ஆட்சி என்பது பெண்களுக்கு மட்டுமல்ல சிறுமிகளுக்கும் விடியாத ஆட்சியாகவே இருப்பதைத்தான் இந்த சம்பவமும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் தங்கை அனிதாவுக்காக குரல் எழுப்பிய அண்ணன்களே இந்த சிறுமிக்காகவும் கொஞ்சம் குரல்கொடுங்கள்…டாஸ்மாக்குக்கு எதிராக குரல் கொடுத்த கோவணன்களே, இந்தக் கொடூர மிருகத்துக்கு எதிராகவும் ஒன்று கூடுங்கள்…
பெண்ணுரிமைப் போராளியாக பிம்பத்தை உருவாக்கி இருக்கும் கனிமொழிகளே, சிறுமிக்காக எதிர்ப்பாவது தெரிவியுங்கள்… ஏனெனில் எல்லோரது வீட்டிலும் குட்டித் தேவதைகள் இருக்கிறார்கள்…
Discussion about this post