விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு பாறையில் சற்று மாறுபட்ட வடிவமுடைய எழுத்துகள் உள்ளதாக அந்நிலத்தின் உரிமையாளர் கனிராஜ் மற்றும் பொறியாளர் கணேஷ் பாண்டி ஆகியோர் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர்கள் விஜயராகவன், ராஜபாண்டி ஆகியோரிடம் கூறினர். இதனால் இந்த இடத்தில் பேராசிரியர்கள் இருவரும் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் 76 செ.மீ வெளிவிட்டமும், 48 செ.மீ உள்விட்டமும் 13 செ.மீ துளையுடன் கூடிய கல்லால் ஆன செக்கில், மேற்புறத்தில் ஒரு வரியுடன் கூடிய கி.பி ஏழாம் நூற்றாண்டை சார்ந்த வட்டெழுத்துக்கள் காணப்படுவதை உறுதி செய்தனர். இந்த எழுத்துக்கள் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குநர் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பட்டது.
இந்தக் கல்வெட்டில் ஸ்ரீ கோவஞ்சேந்தன் என்ற பெயர் மட்டும் பொறிக்கப்பட்டிருந்தது. இவர் இந்த செக்கினை இந்த ஊர் மக்களுக்காக உருவாக்கியவராக இருக்கலாம். மேலும் எள் போன்ற எண்ணெய் வித்துக்களிலிருந்து இந்த செக்கின் மூலம் எண்ணெய் எடுக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் குறிப்பிடதக்க விசயம் என்னவென்றால் இந்த எண்ணெய் செக்கானது விருதுநகரில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வட்டெழுத்துக்கள் பதிக்கப்பட்ட செக்கு ஆகும்.
Discussion about this post