கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியோடு செயல்படுவதால், பிஜேபி உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் விரும்பி வந்து கட்சியில் இணைவதாகவும், இதை அண்ணாமலை உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பக்குவத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின கொண்டாட்டங்களைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார். பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர்; யாரையும் நாங்கள் இழுக்கவில்லை என்றார்.
பாஜகவினர் அதிமுகவில் இணைவதை பக்குவத்தோடு அண்ணாமலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம், அந்த சமுத்திரம் மீது கல்வீசினால் சம்மந்தப்பட்டவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் எச்சரித்தார். கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக அசுர வேகத்தில் வளர்வதால் தானாக முன்வந்து பலரும்கட்சியில் இணைகின்றனர் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இணைவதை காழ்ப்புணர்ச்சியோடு அணுகக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது என்றும், புரட்சித்தலைவிக்கு நிகராக யாரும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார். செஞ்சிக்கோட்டை ஏறியவர் எல்லாம் ராஜா தேசிங்கும் இல்லை, மீசை வைத்தவரெல்லாம் கட்டபொம்மனும் இல்லை என்றும் விளக்கினார். பா.ஜ.கவினர் சிலர் உருவபொம்மை எரிப்பு போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபட்டது தொடர்பாக அந்த கட்சி தலைமை, உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Discussion about this post