திமுக செய்த ஊழலை மறைப்பதற்காக தமிழ்மொழியினைக் காட்டிக்கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மாணவரணி செயலாளர் சக்திவேல் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்து தலைமைதாங்கி சிறப்புரை ஆற்றினார் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம்.
சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியபோது, செய்த ஊழலை மறைப்பதற்கு தமிழ்மொழியினைப் பயன்படுத்திக் கொண்டவர் கருணாநிதி என்றும், மொழிக்காக பாடுபட்டவர்களின் போராட்டத்தினை வியாபாரமாக்கியவர்கள் கருணாநிதியின் குடும்பம் என்றும் அவர் விமர்சனம் செய்தார். மேலும் பேசிய அவர், திராவிட மாடல் என்று சொல்லிக்கொள்ளும் விடியா அரசிடம் திராவிட மாடல் என்பதில் மாடல் என்பதற்கு தமிழ்மொழியில் என்ன பொருள்? என்று சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கால் அடிக்கும்படி கேள்வி கேட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் திமுக அரசு கஞ்சா விற்கிறது என்று விமர்சித்த அவர் மாணவ சமுதாயத்தினை ஆளும் அரசே சீரழிக்கிறது என்று தன்னுடைய வேதனையைத் தெரிவித்தார். நாட்டிலுள்ள பல பிரச்சனைகளையெல்லாம் தட்டிக்கேட்பதை விட்டுவிட்டு தன்னுடைய குடும்பத்தை வளர்ப்பதிலேயே வேலை செய்கிறது என்று குறிப்பிட்டார். இந்த அரசு அனைத்து மக்களின் எதிர்ப்பினையும் சம்பாரித்து வருகிறது என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் அவர்கள், திமுக அரசின் முதல் எதிரி திமுககாரர்கள்தான் என்றும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருந்து குரல் கொடுப்பவர் பச்சைத் தமிழர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்தான் என்று தன் கருத்தினை தெரிவித்தார்.
Discussion about this post