சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள், ஆனால் இங்கு பல் குத்தும் குச்சியை வைத்து அழகான கலைப்பொருட்களை படைத்து, பிரமாண்ட கண்காட்சியை உருவாக்கியுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்.
பழவேற்காட்டில் உள்ள நடுவர் மாதா குப்பத்தில் வசிப்பவர் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பினோ சஜன். சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், தனது திறமையால் பல் குத்தும் குச்சியை கொண்டு இறால், மாதா கோயில் தொடங்கி உலக அதிசயங்கள், உலகப்புகழ் பெற்ற பைசா நகர் கோபுரம், மெக்கா என பல வடிவங்களை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
இதில் மெக்கா போல கட்டமைக்க கிட்டத்தட்ட 210 நாட்கள் செலவிட்டுள்ளார். தனது 6 ஆண்டு கால உழைப்பை ஒருங்கிணைத்து உருவாக்கிய பொருட்களை பழவேற்காடு கடற்கரையில் கண்காட்சியாக அமைத்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார்.
ஒவ்வொரு படைப்பிலும் எத்தனை பல் குத்தும் குச்சிகள் உள்ளன. அவற்றை வடிவமைக்க செலவிடப்பட்ட நேரம், அதனை பற்றிய விளக்க ஆகியவை அடங்கிய குறிப்புகளையும் கண்காட்சியில் வைத்துள்ளார்.
கண்காட்சி காண வரும் பொதுமக்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த தாஜ்மஹால் உள்ளிட்ட உலக அதிசயங்கள், பல்வேறு சிறப்பு வாய்ந்த கட்டிடங்களின் தத்ரூப வடிவமைப்பைக் கண்டு திகைத்துள்ளனர்.
மாத சம்பளத்திற்காக கைக்கட்டி வேலை பார்ப்பதை விட, தனது திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவு, இதுபோன்ற கண்காட்சியை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார் பினோ சாஜன்.
கடற்கரை ஓரத்தில் சிறிய கூடாரத்தில் துவங்கிய இக்கண்காட்சி சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்ற அவரின் இலக்கு வெற்றியடைய நியூஸ் ஜெ தொலைக்காட்சி தனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறது.
Discussion about this post