கல்குவாரிகளுக்கு பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும் என்றும், கல்குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கல்குவாரிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்குவாரி உரிமையாளர்களுக்கு 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த பர்மிட் முறை, தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு பர்மிட் வாங்கினாலும் அனுமதியைப் பெற ஒருநாள் முழுமையாக செலவாகிறது என்றும், மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லியை உற்பத்தி செய்யவதாகவும் உரிமையாளர்கள் வேதனை தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
முறைப்படி கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி வாங்கி, ஜல்லி உற்பத்தி செய்பவர்களை திமுக அரசு கெடுபிடி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், 50 சதவீதத்திற்கு மேல் காலாவதியான கல்குவாரிகள், எந்தவிதமான பர்மிட்டும் பெறாமல், கவனிக்க வேண்டிய ஆளும் கட்சியினரை கவனிப்பதாகவும், இதனால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் முழுவதும் எங்கே போகிறதென்று மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மூன்று நாட்களுக்கு ஒருமுறை பர்மிட் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையினை மாற்றி, பழையபடி 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ பர்மிட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக அரசில், எப்படி கல்குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்றடைந்ததோ, அதன்படி இப்போதும் கல்குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post