டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிடுகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி டவுன் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர்கள், அண்ணா திமுக சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதைதொடர்ந்து, சிதம்பரம் தொகுதிக்குப்பட்ட பூவாலை பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பூவாலை ஊராட்சியில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திறந்த வாகனத்தில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்த அவர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சேத விவரங்களையும், குறைகளையும் கேட்டறிந்தனர்.
அப்போது இடுப்பளவு வெள்ளத்தில் மூழ்கி அழுகிய பயிர்களை விவசாயிகள் எடுத்து வந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.
Discussion about this post