கடலூரில் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், திமுக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான அவரை சிபிசிஐடி போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை இருக்கிறது.
இந்த ஆலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராசு, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி, ஆலை உரிமையாளரான திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் தாக்கியதில் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
கோவிந்தராசு இறப்புக்கு கடலூர் எம்.பி. ரமேஷ் தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆலை தொழிலாளி கோவிந்தராசு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, முதலில் மர்ம மரணம் என்று பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்று கொலை வழக்காக மாற்றப்பட்டு இருக்கிறது.
திமுக எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து கோவிந்தராசு கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன் மற்றும் வழக்கில் தொடர்புடைய அல்லாபிச்சை, வினோத், கந்தவேல், சுந்தர்ராஜ் ஆகியோரை விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் அழைத்துள்ளனர்.
எம்.பி.ரமேஷை தவிர்த்து விசாரணைக்கு ஆஜரான மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவான தி.மு.க. எம்.பி.ரமேஷை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
சிபிசிஐடி வசம் சிக்கினால் எம்.பி.ரமேஷ் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே வெறும் முந்திரி பருப்பு மாயமானதற்கா தொழிலாளி ஒருவரை கொலை செய்யும் அளவிற்கு போனது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
எம்.பி. மற்றும் அவரது உதவியாளர் இதில் நேரடியாக தலையிட்டு இருப்பதால் வேறு ஏதேனும் பிரச்சினையில் தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில், கைதுக்கு பயந்து தலைமறைவாகி இருக்கும் தி.மு.க. எம்.பி. ரமேஷ் சென்னையில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்படும் வரை அவர் பண்ருட்டியில் இருக்கும் அவரது வீட்டில் இருந்ததாகவும், வழக்கில் கைது நடவடிக்கை நிச்சயம் என்பதை அறிந்து சென்னையில் இருக்கும் திமுக மூத்த அமைச்சர் ஒருவரிடம் அடைக்கலம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கு விவகாரம் நெருக்கடி ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அந்த கட்சியின் தலைமை மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
Discussion about this post