குலாப் புயல், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்துள்ள நிலையில், இந்த இரண்டு மாநிலங்களில் கடுமையான சேதத்தை புயல் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக வலுப்பெற்றது.
குலாப் எனப் பெயரிடப்பட்ட இந்த புயல், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடல் பகுதியில் கரையை கடக்க தொடங்கியது.
இதனால், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும், கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே, மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
நேற்று இரவு 9 மணியளவில் குலாப் புயல், கரையை கடந்த நிலையில், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம் பகுதியில் கடலிலிருந்து திரும்பிய மீனவப் படகு ஒன்று கவிழ்ந்தில், கடலில் விழுந்த 5 மீனவர்களை, கடலோர காவல்படையினர் காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்தனர்.
ஒடிசா மாநிலத்தைப் பொறுத்தவரை, 24-க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சிறப்பு பேரிடர் மீட்புக்குழு ஆணையர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 நாட்களுக்கு குலாப் புயலின் தீவிரம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் மழையால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், அவசர கால உறைவிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
குலாப் புயலின் தாக்கம் காரணமாக ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களின் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது.
ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் மற்றும் விளை நிலங்களில் வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
Discussion about this post