அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்து இருக்கிறது.
கடந்த 20 ஆம் தேதி விழுப்புரம் – மாம்பழப்பட்டு சாலையில், திமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்க திமுக வினர் வழி நெடுக கொடி கம்பம் நட்டுள்ளனர்.
இந்த பணியில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனையும் திமுகவினர் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.
மாம்பழப்பட்டு மின்வாரிய அலுவலகம் அருகே கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு இருந்த போது சிறுவன் தினேஷ் கையில் வைத்து இருந்த கொடி கம்பம், மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியுள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தினேஷ், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளான்.
படுகாயம் அடைந்த சிறுவன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல், மறுநாள் உயிரிழந்துள்ளான்.
இது குறித்து சிறுவனின் தாயார் லட்சுமி விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.
இந்த விவகாரம் தெரிந்தவுடன் அவசர அவசரமாக கொடி கம்பங்களை அகற்றிவிட்டு ஒன்றும் தெரியாதது போல திமுக வினர் பதுங்கிவிட்டனர்.
ஆனால் சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரம் பூதாகரமான நிலையில், காவல்துறையினர் இரண்டு நாட்கள் கழித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
அதிலும், யாரையோ காப்பாற்றும் நோக்கில், விளையாட்டாக சிறுவன் தினேஷ் கம்பியை தூக்கியதாகவும், அப்போது மின்சாரம் தாக்கி காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். எந்த இடத்திலும் கொடி கம்பம் என்ற வார்த்தை இடம் பெறாமல் பாத்துக் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் அமைச்சரை வரவேற்க கொடிக்கம்பம் நட அனுமதி வாங்கப்பட்டதா? அனுமதி பெறவில்லை என்றால் அதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?
13 வயது சிறுவனை கொடி கம்பம் நட உட்படுத்தியது சரியா? சிறுவனை கொடி கம்பம் நடவைத்த திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
விபத்து நடந்து 2 நாட்களுக்கு பின் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஏன்? என பல்வேறு கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் பதில் இல்லை.
அமைச்சரை பொன்முடியை வரவேற்க திமுக கொடி கம்பம் நட்டபோது சிறுவன் உயிரிழந்ததை மறைக்கவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் முயற்சி செய்கிறார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் புகாராக இருக்கிறது.
இந்தநிலையில் உயிருக்கு ஈடு, பணம் என்ற ரீதியில், உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடு வழங்கிவிட்டதாக அமைச்சர் பொன்முடி தரப்பில் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை மேலும் அதிகரித்து இருக்கிறது.
அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?… இந்த கேள்விகள் சென்னையில் சுபஸ்ரீ என்ற பெண் விபத்தில் உயிரிழந்த போது, திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பியவை.
தற்போது திமுக அமைச்சர் பொன்முடி தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள வைக்கப்பட்ட கொடி கம்பியால் சிறுவன் உயிரிழந்திருப்பதற்கும் முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் பதில் சொல்வாரா? சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதே தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது.
Discussion about this post