வேலூரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மயக்கமடைந்த திமுக நிர்வாகியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால் அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உட்பட பலரது வாகனங்கள் அங்கிருந்தும், மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோவிற்காக அவர் காக்க வைக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட்டு அருகே கைத்தறி துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் தான் இந்த அவல நிலை. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கிளை செயலாளர் சவுந்தர் என்பவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து சக நிர்வாகிகள் சவுந்தரை நாற்காலியுடன் வெளியே கொண்டு சென்று சாலையில் வைத்தனர். அமைச்சர் வாகனம், அமைச்சரின் பாதுகாப்பு வாகனம், மாவட்ட கழக நிர்வாகிகளின் வாகனம் உட்பட ஏராளமான வாகனங்கள் அப்பகுதியில் இருக்க, ஆட்டோவுக்கு சொல்லி அனுப்பிய திமுகவினர், மயக்கமடைந்த சவுந்தருக்கு முதலுதவி கூட அளிக்கவில்லை. வெகுநேரமாக காக்க வைத்து, பிறகு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால் சவுந்தர் பரிதாபமாக மரணமடைந்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த சவுந்தரின் குடும்பத்தார் அவரது உடலை கண்டு கதறியது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
அமைச்சர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தடைப்படக் கூடாது என்பதில் திமுகவினர் காட்டிய அக்கறையை, பல காலமாக உடனிருந்த செயலாற்றிய நிர்வாகியின் உடல் நலனில் காட்டாதது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டப்படி அமைச்சரை வழியனுப்பி வைத்த திமுக நிர்வாகிகள், மரணமடைந்த நிர்வாகியின் குடும்பத்தாரை கண்டுகொள்ளாமல் விட்டது அப்பகுதி திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Discussion about this post