சிவகங்கையில் திமுக கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் மணல் கடத்தும் லாரியை காவல்துறை துரத்திச் சென்ற பரபரப்பு காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேம்பத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு பகுதியில் பகல் நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் நேரில் சென்ற போது, ஆற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த லாரியை மடக்கிப் பிடிக்க போலீசார் முயன்றுள்ளனர்.
ஆனால் மணல் கடத்தல் லாரிக்கு பாதுகாப்பாக சென்ற திமுக பிரமுகர் ஒருவரின் கார் காவல்துறைக்கு வழிவிடாமல் தடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் மணல் லாரி தப்பிச் சென்ற நிலையில், பாதுகாப்புக்குச் சென்ற திமுக பிரமுகரின் காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தபோது, அவர் எஸ்.எஸ்.ஐ ஒருவரின் பெயரை கூறி அவரின் அனுமதியோடு தான் மணல் கடத்தப்படுவதாக கூறும் வீடியோ காட்சி வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே, மணல் கடத்தல் விவகாரத்தில், காவல்துறையினர் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தேவகோட்டை பகுதிக்கு நேரடியாக சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மணல் கடத்தல் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யாமல் விடப்பட்ட லாரி மற்றும் மணல் கடத்தலுக்கு பாதுகாப்பாக வந்த திமுக கொடி கட்டிய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
காரில் வந்த விஜய் மற்றும் கடத்தல் லாரி ஓட்டுநர் ஆகியோரை உடனடியாக கைது செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மணல் கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய திருவேகம்புத்தூர் ஆய்வாளர் சுப்பிரமணியனுக்கு, தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post